மடிக்கணினிக்கு அருகில் இருவர் ஒரு குறிப்பேட்டைப் பார்க்கின்றனர்; ஒருவர் சிவப்பு நிறக் கம்பளிச் சட்டையும் மற்றவர் நீல நிறக் கையில்லா மேலாடையும் அணிந்துள்ளனர்.

புகைப்படம்: ராக்ஃபெல்லர் அறக்கட்டளை

மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்க நகரங்களுக்கு உதவுதல்

செயற்கை நுண்ணறிவால் நகரங்களின் அத்தியாவசியப் பொதுச் சேவைகளை மேம்படுத்த உதவும் அமைப்புகளுக்கு நிதியளிக்க, ராக்ஃபெல்லர் அறக்கட்டளையுடன் இணைந்து 50 மில்லியன் டாலர் திட்டம்.

மக்கள் அன்றாடம் நம்பியிருக்கும் பல சேவைகள் நகர அளவிலேயே வழங்கப்படுகின்றன. சுகாதாரச் சேவைகளையும் நலத்திட்ட உதவிகளையும் பெறவும், தீவிர வானிலைக்குத் தயாராகவும், பொருளாதார வாய்ப்புகளைக் கண்டறியவும், தங்கள் சமூகங்களை வடிவமைக்கும் முடிவுகளில் பங்கேற்கவும் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு உதவுகின்றன.

குறைவான வளங்களைக் கொண்டு அதிகப் பணிகளைச் செய்ய வேண்டிய நிலையில் நகர நிர்வாகங்கள் உள்ளன. பிரச்சினைகளை முன்கூட்டியே கணிக்கவும், தகவல்களை எளிதில் அணுக வழிவகுக்கவும், அரசு ஊழியர்களுக்குச் சிறந்த பணிக் கருவிகளை வழங்கவும் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகள் அரசு அமைப்புகளுக்கு உதவும். இந்தச் சாத்தியங்களைச் சிறந்த சேவைகளாக மாற்ற, உள்ளூர்ச் சூழலை அறிந்த, தொழில்நுட்ப அறிவும் வளங்களும் கொண்ட அமைப்புகள் தேவை. அவை நகர நிர்வாகங்களுடன் இணைந்து, எவை பயனளிக்கின்றன என்பதைச் சோதித்து, வெற்றிகரமான அணுகுமுறைகளைப் பொறுப்புடன் விரிவுபடுத்த வேண்டும்.

இன்று, OpenAI Foundation மற்றும் ராக்ஃபெல்லர் அறக்கட்டளை இணைந்து சேவை வழங்கும் நகரங்கள்: பொதுச் சேவைகளுக்கான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகள்⁠ என்ற 50 மில்லியன் டாலர் திட்டத்தைத் தொடங்குகின்றன. நகர மக்களின் பிரச்சினைகளைச் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தீர்க்க நகர நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்றும் அமைப்புகளுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும்.

உலகளாவிய திறந்த விண்ணப்ப அழைப்பின் மூலம், சேவை வழங்கும் நகரங்கள் திட்டம் 24 மாதங்களில் 500,000 முதல் 2 மில்லியன் டாலர் வரையிலான மானியங்களை வழங்கும். உலகெங்கும் மொத்தமாக 100 மில்லியன் நகர மக்கள் வரை சென்றடையும் அமைப்புகளுக்கு நிதியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

நகரங்கள் தீர்க்க விரும்பும் பிரச்சினைகளிலிருந்து தொடங்குதல்

உள்ளூர் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு, அதிநவீன செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் சமீபத்திய திறன்களைப் பயன்படுத்திப் பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்தும் திட்டங்களைச் சேவை வழங்கும் நகரங்கள் நாடுகிறது.

இந்தத் திறந்த விண்ணப்ப அழைப்பு நான்கு துறைகளில் கவனம் செலுத்தும்:

  • பொதுச் சுகாதாரம்: முன்னணிப் பராமரிப்பு, நோய்க் கண்காணிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள், உணவு கிடைப்பதை உறுதிசெய்தல், ஊட்டச்சத்து ஆகியவை உள்ளிட்ட பொதுச் சுகாதார அமைப்புகள் அதிக மக்களைச் சென்றடையவும், தயார்நிலையை மேம்படுத்தவும் உதவுதல்.

  • பொருளாதார முன்னேற்றம்: வேலையில்லாதவர்களும் போதிய வேலை கிடைக்காதவர்களும் வருமானம், திறன்கள், நலத்திட்ட உதவிகளைப் பெற வழிவகுத்தல். நலத்திட்டங்களில் சேர்த்தல், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், திறன் அடிப்படையிலான ஆட்சேர்ப்பு, நிறுவனங்களின் தேவைக்கேற்ற பயிற்சி ஆகியவையும் இதில் அடங்கும்.

  • சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் திறன்: பொதுமக்கள் பாதுகாப்பு, அவசரச் சேவைகள், எரிசக்தி உள்கட்டமைப்பு, நில மேலாண்மை உள்ளிட்டவற்றின் மூலம் சுற்றுச்சூழல் அதிர்வுகளைக் கணிக்கவும், தாங்கவும், அவற்றிலிருந்து மீளவும் நகரங்களுக்கு உதவுதல்.

  • குடிமக்கள் பங்கேற்பு: இருவழித் தொடர்புக்கான சேவை வழிகள் முதல் மக்கள் பங்கேற்புடன் முடிவெடுத்தல் வரை, நகர நிர்வாகங்கள் மக்களைத் தாமாக முன்வந்து அணுகவும் விரைவாகப் பதிலளிக்கவும் உதவும் தீர்வுகள். எண்மச் சேவைகளை அணுகும் வசதி, இணைய இணைப்பு, நீதிமன்றச் சேவைகள், அனுமதி வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைச் செயல்முறைகள் இதில் அடங்கும். வாக்களிப்பு அல்லது தேர்தல் தொடர்பான திட்டங்கள் இதில் சேராது.

நகரங்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் நடைமுறைக் கருவிகளுடனும் அமைப்புகளுடனும் அதிநவீன செயற்கை நுண்ணறிவை இணைக்கும் திட்டங்களைச் சேவை வழங்கும் நகரங்கள் வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளையும் தயாரிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம். OpenAI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமோ, அதைப் பயன்படுத்துவோருக்கு முன்னுரிமையோ இல்லை. தாங்கள் சேவை செய்ய விரும்பும் சமூகங்களை ஆழமாக அறிந்த, அரசுச் சூழலில் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் திறன் கொண்ட குழுக்களைச் சேவை வழங்கும் நகரங்கள் நாடுகிறது. மதிப்பீடு, தனியுரிமை, பாதுகாப்பு, நீண்டகால நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான தெளிவான திட்டங்களும் அவர்களிடம் இருக்க வேண்டும்.

சேவை வழங்கும் நகரங்கள் இரண்டு நிலைகளில் உள்ள திட்டங்களுக்கு ஆதரவளிக்கும். 500,000 டாலர் முதல் 1 மில்லியன் டாலருக்குக் குறைவான தொடக்க மானியங்கள், நகரக் கூட்டாளிகளுடன் இணைந்து கருத்தைச் செம்மைப்படுத்தவும், முன்மாதிரியை உருவாக்கி உண்மையான பயனர்களுடன் சோதிக்கவும், நகரச் சூழலில் தீர்வைச் சோதனை முறையில் செயல்படுத்தவும் அமைப்புகளுக்கு உதவும். 1 மில்லியன் முதல் 2 மில்லியன் டாலர் வரையிலான விரிவாக்க மானியங்கள், ஏற்கெனவே ஒரு நகரில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு ஆரம்பப் பலன்களை வெளிப்படுத்திய தீர்வுகளுக்கு ஆதரவளிக்கும். அவை அதிக மக்களைச் சென்றடையவோ கூடுதல் நகரங்களுக்கு விரிவடையவோ இந்த மானியங்கள் உதவும்.

ஒவ்வொரு திட்டத்தையும் தகுதியுள்ள ஓர் அமைப்பு வழிநடத்த வேண்டும்; அத்திட்டம் அறப்பணி நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். இலாப நோக்கற்ற அமைப்புகள், பொதுநல நிறுவனங்கள், குறிப்பிட்ட சில இலாப நோக்குடைய அமைப்புகள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. சமூகத்திற்கான பலன்களையும் தாக்கத்தையும் உறுதிசெய்ய அர்ப்பணிப்புள்ள நகர நிர்வாகக் கூட்டாளியுடன் இணைந்து ஒவ்வொரு திட்டமும் பணிகளை நிறைவேற்ற வேண்டும். நகர நிர்வாகங்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. முழுத் தகுதி நிபந்தனைகளுக்கு திட்டத்தின் இணையதளத்தைப்⁠ பார்க்கவும்.

நகரங்கள் ஏற்கெனவே கற்றுவரும் அனுபவங்களை அடித்தளமாகக் கொள்ளுதல்

2023-இல் ராக்ஃபெல்லர் அறக்கட்டளையும் OpenAI நிறுவனமும் தொடங்கிய முயற்சிகளிலிருந்து இப்பணி உருவாகியுள்ளது. அப்போது நகரச் சேவைகளைச் செயற்கை நுண்ணறிவால் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய, ஆறு கண்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடிமைத் தலைவர்களை அவை ஒன்றிணைத்தன.

அந்த உரையாடல்கள் கொலம்பியாவின் காலி, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களில் தொடக்கத் திட்டங்களுக்கு வழிவகுத்தன. காலியில், Dengue.AI⁠ நோய்ப் பரவலை முன்னறிவித்து, தடுப்பு நடவடிக்கைகளைத் தேவையான இடங்களில் மேற்கொள்ளப் பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு உதவுகிறது. கேப் டவுனில், செயற்கை நுண்ணறிவில் இயங்கும் செய்திப் பரிமாற்றத் தளம்⁠ உள்ளாட்சி நிர்வாகத்துடன் மக்கள் தொடர்புகொள்ள உதவுகிறது. ரியோவில், WhatsApp உரையாடல் இயலி⁠ வெள்ள எச்சரிக்கைகளையும் மக்கள் அளிக்கும் தகவல்களையும் நகரின் அவசர நடவடிக்கை அமைப்புகளுடன் இணைக்கிறது.

இந்தத் தொடக்கத் திட்டங்களை அடித்தளமாகக் கொண்டு சேவை வழங்கும் நகரங்கள் செயல்படுகிறது. நம்பிக்கையளிக்கும் அணுகுமுறைகளை அடையாளம் காண்பது, மக்களுடனும் அரசு ஊழியர்களுடனும் அவற்றைச் சோதிப்பது, வெற்றிகரமான தீர்வுகளை நகரங்கள் ஏற்கெனவே பயன்படுத்தும் சேவைகளிலும் அமைப்புகளிலும் எவ்வாறு இணைப்பது என்பதைக் கற்றுக்கொள்வது ஆகியவை இதன் நோக்கங்கள்.

செயற்கை நுண்ணறிவின் பயன்களை விரிவுபடுத்துதல்

ஆர்டிஃபிஷியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் மனிதகுலம் முழுவதற்கும் பயனளிப்பதை உறுதிசெய்வதே OpenAI Foundation அமைப்பின் நோக்கம். செயற்கை நுண்ணறிவின் பயன்களைச் சமூகங்கள் இப்போதே பரவலாகப் பெற உதவுவதன் மூலம், எங்கள் குடிமைச் சமூகம் மற்றும் அறப்பணித் திட்டம் அந்த நோக்கத்தைச் செயலாக்குகிறது.

உயிர்காக்கும் மருத்துவ முன்னேற்றங்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதிசெய்தல்⁠, சிறு விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த வானிலை மற்றும் பயிர் நோய் முன்னறிவிப்புகளை⁠ வழங்குதல், பயனுள்ள செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் இயன்றவரை அதிக மொழிகளில் செயல்படுவதை உறுதிசெய்தல்⁠ ஆகிய எங்கள் முயற்சிகளின் தொடர்ச்சியாகச் சேவை வழங்கும் நகரங்கள் அமைகிறது. உள்ளூர் சமூகங்களுக்குச் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவும் என்பதை ஆராய இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கு உதவும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் செயற்கை நுண்ணறிவு நிதியத்தின்⁠ பணியையும் இது முன்னெடுத்துச் செல்கிறது. சேவை வழங்கும் நகரங்கள் மூலம், மக்கள் அன்றாடம் நம்பியிருக்கும் அத்தியாவசியப் பொதுச் சேவைகளுக்கும் அந்தப் பணியை விரிவுபடுத்துகிறோம். இந்த முயற்சிகள் அனைத்திலும், பிரச்சினைகளை நேரடியாக அறிந்த அமைப்புகளின் நிபுணத்துவத்துடன் செயற்கை நுண்ணறிவு முன்னேற்றங்களை இணைக்கிறோம். இதன் மூலம் புதிய திறன்களை மக்களுக்கான நடைமுறைப் பயன்களாக மாற்றுகிறோம்.

சேவை வழங்கும் நகரங்கள் திட்டத்திற்கு இப்போது விண்ணப்பிக்கலாம். முன்மொழிவுகளைச் சிறு காணொளியுடன் 2026 நவம்பர் 29-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இங்கே விண்ணப்பிக்கவும்⁠.