குரலில் தொடங்கி, செயற்கை நுண்ணறிவின் பலன்களை விரிவுபடுத்துதல்
உலக மொழிகள் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு செயல்படுவதை உறுதிசெய்யும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் கேட்ஸ் அறக்கட்டளையுடனும் உலகெங்குமுள்ள கூட்டாளர்களுடனும் OpenAI Foundation இன்று இணைந்தது.
ஒருவர் பேசும் மொழியின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் பலன்களைப் பெறுவதற்குத் தடை இருக்கக் கூடாது. இருப்பினும், குறிப்பாக நீண்ட காலமாகத் தொழில்நுட்ப ஆதரவு போதிய அளவில் கிடைக்காத மொழிகளைப் பேசும் கோடிக்கணக்கான மக்களுக்கு, இன்றைய செயற்கை நுண்ணறிவு மாடல்கள் மிகவும் குறைவான திறனும் பயனுமே கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவின் பலன்கள் பரவலாகக் கிடைப்பதை உறுதிசெய்ய, குறைந்த வளமுள்ள மொழிகளில் மாடல்களின் செயல்திறனை மேம்படுத்துவதை எங்கள் பணியின் முக்கிய இலக்காகக் கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். செயல்திறனிலும் கிடைக்கக்கூடிய தரவிலும் குறிப்பாகப் பெரிய இடைவெளிகள் உள்ள குரல்வழிச் செயற்கை நுண்ணறிவுக்கான தரவு மற்றும் உள்கட்டமைப்பிலிருந்து தொடங்குவோம். போதிய வணிக முதலீட்டைப் பெற வாய்ப்பில்லாத மொழிகளுக்கு முன்னுரிமை அளிப்போம்.
பலருக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மிகவும் இயல்பான, எளிதில் அணுகக்கூடிய வழி பேச்சுதான். திறன்மிக்க குரல் மாடல்கள், எங்களிடம் மானியம் பெறும் அமைப்புகளும் பல பிற அமைப்புகளும் இன்னும் அதிகமான சமூகங்களுக்குச் சேவையளிக்க உதவும். ஒரு சுகாதாரச் சேவையை அழைக்கும் நோயாளி தமது அறிகுறிகளை விவரித்து, தொடர் கேள்விகளுக்குத் தமது சொந்த மொழியில் பதிலளித்து, சரியான சிகிச்சையுடன் இணைக்கப்படலாம். தனது மொழியில் கேள்வியை உரக்கக் கேட்கும் ஒரு பெண் விவசாயி, தனது நிலத்துக்கும் பயிருக்கும் ஏற்ற நடவு ஆலோசனையைப் பெறலாம்.
உலகின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்பான பிராக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஆசிஃப் சலே கூறுகிறார்: “வங்கதேசத்தில் எங்கள் சுகாதாரப் பணியாளர்களுக்காகச் செயற்கை நுண்ணறிவு எழுத்தரை உருவாக்க [பிராக்] முயன்றபோது, வங்காள மொழியில் மாடல்களுக்கு இருந்த வரம்புகள் எங்களைத் தடுத்துவிட்டன. நாங்கள் சேவையளிக்கும் சமூகங்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரே நடைமுறை வழி குரல்தான். எனவே, எங்களுடையது போன்ற மொழிகளில் அதைச் சரியாகச் செயல்படச் செய்வதே, நாங்கள் சென்றடையும் 14.5 கோடி மக்களுக்குச் செயற்கை நுண்ணறிவு உண்மையில் பயனளிக்குமா அல்லது பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதா என்பதைத் தீர்மானிக்கும்.”
AGI மனிதகுலம் முழுவதற்கும் பயனளிப்பதை உறுதிசெய்ய, இந்தச் சவாலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைவது அவசியம். இந்த இடைவெளியைப் போக்க உறுதிபூண்டுள்ள அமைப்புகள், நாடுகள் மற்றும் தலைவர்களின் கூட்டணியில் இடம்பெறுவதில் பெருமைகொள்கிறோம். எங்கள் கூட்டாளர்களுடன் இந்தப் பணியை முன்னெடுக்கும்போது மேலும் பல தகவல்களைப் பகிர ஆவலுடன் உள்ளோம்.
